இந்திய – ரஷிய ராணுவம் கூட்டுப்பயிற்சி

207 0
இந்திய-ரஷ்ய முப்படைகளின் மாபெரும் கூட்டுப் போர் பயிற்சி அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில் இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 350 பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக சீனா மூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவம், ரஷ்யாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது.
இதைத்தொடர்ந்து 2 நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை இணைந்து அக்டோபர் மாதம் 19ஆம் திகதி முதல் 10 நாட்கள்
மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இந்த பயிற்சி ரஷ்யாவின் மலைப்பகுதியான விளாடிவோஸ்டாக் உள்பட 3 பகுதிகளில் நடைபெறுகிறது.
இதில் இரு நாடுகளின் அதிநவீன போர் டாங்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உள்பட 350 பேர் கலந்துகொள்கின்றனர். இந்திய படைகளுக்கு மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தலைமை ஏற்பார்.
போர் பயிற்சியின்போது, உண்மையில் போர் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்த ஒத்திகைகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் அன்னிய நாடு ஒன்றில் ஒரே நேரத்தில் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுபோன்ற முப்படை போர் பயிற்சியை இந்தியாவுக்கு அளிப்பது ரஷியாவிற்கும் இதுவே முதல் தடவை. இதுவரை இரு நாடுகளும் தனித்தனியாகத்தான் தரைப்படை, விமானப்படை, கடற்படை வீரர்கள் மூலம் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை தீவிரப் படுத்த ஒப்புக்கொண்ட நிலையில் இந்த போர் பயிற்சியில் ஈடுபடவிருப்பது, நினைவுகூரத்தக்கது.

Leave a comment