பெரும்பான்மையின மாணவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு

219 0

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பகுதியை பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு நேற்றையதினம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பதற்றமான சூழ்நிலை இன்று காலையும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோதிலும் நேற்றிரவு 8 மணி வரையில் பொலிஸார் வரவில்லையென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடனான ஆர்ப்பாட்டம் நேற்று இரவு வேளையிலும் பல்கலைக்கழ பிராதான நுலைவாயில் முன்பாக இடம்பெற்றது.

ஐந்து கோரிக்கைகளில் பிரதானமாக விடுதிப் பிரச்சினை மற்றும் வகுப்புத்தடை பிறப்பிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்புத் தடை நீக்குதல் தொடர்பான இரு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் நேற்றைய தினம்  இரவு தீப்பந்தம் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

நேற்றுமுன் தினம் மதிய வேளை இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பத்தொன்பது பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி மன்றில் ஆஜராகும்படி அழைப்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேற்படி விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளுடனேயே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரமே விடுதி வசதி மேற்கொள்ளப்படுகின்றது. ஏனையோர் பல்கலைக்கழகத்தின் வெளியே விடுதி எடுக்க வேண்டும். அதற்கான செலவீனங்களை பல்கலைக்கழகம் பொறுப்பேற்கும். தற்போது சென்ற வருடம் முதல் வருட மாணவர்களாக இருப்பவர்கள் தற்போது இரண்டாம் வருடத்திற்கு சென்றமையால் அவர்கள் பல்கலைக்கழகத்தின் வெளியே சென்று விடுதி வசதி தேட வேண்டும் அப்போது தான் இவ்வருடம் இறுதி வருட மாணவர்களுக்கான விடுதி வசதி ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும். அதற்காகவே இரண்டாம் வகுப்பு மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் நியாயமற்ற முறையில் எந்த மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படவில்லை. அவர்களின் மேல் காணப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் அதிகமானதன் காரணமாகவே இவ்வாறான வகுப்புத்தடைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மாணவர்கள் இவ்விடயத்தை கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்கள் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை விட்டு வெளியேறும் வரை தாங்களும் வெளியேறுவதில்லை என பல்கலைக்கழக உபவேந்தர் பிரதி உபவேந்தர் உட்பட நிர்வாகத் தரப்பினர் சிலர் பல்கலைக்கழத்தினுள்ளேயே இருப்பதாகவும் தெரியவருகின்றது.

Leave a comment