ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் தமக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மரபுரிமையாக்கி தேசிய நூதனசாலைக்கு வழங்கினார்.
இதற்கான நிகழ்வு தேசிய நூதனசாலையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
தொல்லியல் பெறுமதியுடன்கூடிய இந்த வாள் கண்டி யுகத்துக்கு உரியதாகும்.
1906 ஆண்டில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற புராதன தொல்பொருள் ஏலவிற்பனையில் ரஷ்யாவினால் அந்த வாள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், ரஷ்யாவின் புராதன பொருட்களை பாதுகாக்கும் பிரிவில் அந்த வாளும் உள்ளடங்கியது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு விஜயம் செய்தபோது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால், அந்த வாள் பரிசளிக்கப்பட்டது.
அதனை தேசிய உரிமையாக்கி, தேசிய நூதனசாலையில் வைப்பதற்காக ஜனாதிபதியால், கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான நன்றிக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசு தேசிய நூதனசாலை பணிப்பாளர் சனூஜா கஸ்தூரியாராச்சியினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

