நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இலவச சிகிச்சைகள் இன்று ஆரம்பம்

84 0

டொக்டர் நெவில் பெர்ணான்டோ ஊடாக அரசிடம் கையளிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இன்று முதல், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் போதனா வைத்தியசாலையாக நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியாகும்போது சுமார் 100 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்றதாக வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் அஜீத் மென்டிஸ் தெரிவித்தார்.

இன்று முதல் இந்த வைத்தியசாலையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதுடன் சலக நோய்களுக்கும் தேவையான மருந்துகள் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படும்.

600 படுக்கைகள் கொண்ட இந்த வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைகளுக்கு 20 கோடி ரூபாய், அமைச்சரவை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் அதிகளவானோர் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மனிதவலு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கபடும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் கிழக்கு கொழும்பின் போதனா வைத்தியசாலையாக இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் முதலாவது நோயாளி, வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் அஜீத் மென்டிஸால் வைத்தியசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அதன்போது, வைத்தியசாலையின் இயக்குநர் டொக்டர் ரியர்அட்மிரல் என்.ஈ.டபிள்யூ.ஜயசேகர உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

வைத்தியசாலையின் தலைவர் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சரின் தலைமையில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.