வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு – ஜனாதிபதி தீர்மானம்

368 0
பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உலர் உணவு பொதிகளை வழங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர் தேவைகளை நிறைவேற்றவும் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனிடையே, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விபரங்களை அறிய ஜனாதிபதி கெபிதிகொல்லேவ பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது அங்கு வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டு அறிந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியால் தற்போது இது வரையில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 49 குடும்பங்களை சேர்ந்த 10 லட்சத்து 93 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் 17 மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக அதிகளவில் வடமாகாணமே பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தை பொருத்த வரை யாழ்ப்பாண மாவட்டமே வரட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் 34 ஆயிரத்து 49 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவிலானார் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கிழக்கு மாகாணம் வடமத்திய மாகாணங்களிலும் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment