நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 459 பேருக்கு எதிராக வழக்கு

500 0

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 459 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 27ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இரு நாட்களுக்கான டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் நிறைவடைந்த இந்த வேலைத் திட்டத்தில், டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 730 இடங்கள் இனங்காணப்பட்டன. குறிப்பாக, மேல் மாகாணத்தில் இருந்த 58 அரச நிறுவனங்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 7 டெங்கு பரவும் வகையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாக இருந்த மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் புத்தளம், மாத்தளை, உக்குவெல, பதுளை மற்றும் ஹாலி எல ஆகிய பகுதிகளின் சில இடங்களில் டெங்கு நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Leave a comment