இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள்

434 0

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் நீருயிரின திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சட்ட மூலம் ஒரு ‘கறுப்பு சட்டமூலம்’ என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாட்டுத் தலைவர் எம்.கே.ஸ்ராலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டவிரோதமான முறைமைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனைகளுடன் இந்த சட்ட மூலம் அமுலாக்கப்பட்டுள்ளது.

புதிய சட்ட மூலத்தின்படி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 50,000 ரூபாய் அபராதமும், 2 வருட சிறை தண்டனையும் வழங்கப்படுவதுடன், படகும் பறிமுதல் செய்யப்படும்.

இது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிமுறைமையையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியாவை தமது நண்பர் என்று இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது.

ஆனால் இந்தியாவின் கோரிக்கையை மீறி தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை புரிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டத்தை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடும் தமிழக படகுகளுக்கு ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமூலத்தைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஹிந்து செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, தாம் எமது நாட்டின் மீனவர்களின் நலன்பொருட்டே செயற்பட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment