மக்கள் விரும்பாவிட்டால் புதிய அரசியலமைப்பை உருவாக்காதிருக்க தாம் தயாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து, அரசியல் தீர்வின் அடிப்படையில் அபிவிருத்தியை ஏற்படுத்த மக்களின் ஆணை கிடைத்தது.
அந்த ஆணைக்கு துரோகமிழைக்க முடியாது.
அரசியலமைப்பை தாம் உருவாக்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இறுதி அறிக்கையை முன்வைக்காமல், இடைக்கால அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்து, நாட்டில் பாரிய கருத்தாடலை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் கருத்துகள் அறியப்படும்.
இவ்வாறாக, அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படும் இணக்கப்பாடுகளைக் கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.
இந்த நிலையில், மக்கள் வேண்டாம் என்றால் இந்தப் பணிகளை கைவிட முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை அவ்வாறே பேண ஜனாதிபதியும் தாமும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

