ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

314 0

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கத்தினால் 02-07-2017 அன்று ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.

ராபர்ட் பயஸ் நிரபராதியாக 26 ஆண்டுகள் சிறையில் கழித்தும் விடுதலை இல்லாத நிலையில் தன்னை கருணைக் கொலை செய்துவிடும்படி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாத்வா இவர் நிரபராதி என்று அறிவித்த பின்னரும் இவர் சிறையில் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டில் நீதி எங்கே இருக்கிறது?

ராஜீவ் காந்தி கொலையில் ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமி பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் நிரபராதித் தமிழர்களோ 26 ஆண்டுகள் கழித்தும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இதுவா நீதி?

மகாத்மா காந்தியை கொலை செய்த பார்ப்பன கோபால் கோட்சே பிரிவு 161-ன் அடிப்படையில் மகாராஷ்டிர அரசாங்கத்தால் 15 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். பார்ப்பானுக்கு விடுதலை, நிரபராதி தமிழர்களுக்கு சிறை என்பதே நிலையாக இருக்கிறது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பனிய காஞ்சி ஜெயேந்திரனை இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் வந்து வணங்குகிறார் என்றால் வேறெந்த நீதியை நாம் இங்கு எதிர்பார்க்க முடியும்?

மாநில உரிமையான பிரிவு 161 ஐ தமிழர் விரோத மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்து விட்டு, தனக்கு அதிகாரம் இல்லை என சொல்லும் தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்தும், ஏழு தமிழர் விடுதலையை தொடர்ந்து தடுக்கிற வேலையை செய்கிற பார்ப்பனிய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க குணசேகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தஞ்சை தமிழன், தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, மக்கள் இயக்க தேசிய கூட்டமைப்பின் தோழர் அருண் ஆகியோரும் இந்த இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் முருகன் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்

Leave a comment