மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டால் வைத்தியர்கள் சங்கம் பொறுப்பேற்க வேண்டும்!

370 0

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் வைத்தியர்கள் சங்கமும் வைத்தியர்களுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியாக டெங்கு நோய் வெகுவாக பரவி வருகின்றது.  அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த சாதாரணதரத்தில் (சிங்கள தமிழ் மொழிமூலம் 2016) சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஆசிரியர் ஆலோசகர்கள் உதவி கல்வி பணிப்பாளர்கள் பணிப்பாளர்கள் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

அவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம்,எஸ்.பீ.ரட்ணயாக்க மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் ஈ.பி.டி.கே.ஏக்கநாயக்க, மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.இரவீந்திரன், நிகழ்வின் இணைப்பாளர் யட்டியாந்தோட்டையை சேர்ந்த ஜெகநாதன் ஆகியோரும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

வலப்பனை கல்வி பணிமனையின் பணிப்பாளர்; டி.எம்.எஸ்.கருணாரத்ன தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை கல்வி வலயம் முதலிடத்தையும் மாகாண ரீதியில் ஆறாவது (6) இடத்தையும் தேசிய ரீதியில் 55 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டதை முன்னிட்டு இந்த நிகழ்வை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஒழுங்கமைத்திருந்தார்.

இதற்கான அனுசரனையை இங்கிலாந்து நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஏ.மரியதாஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பல முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய வைத்தியர்கள் அதனை செய்யாமல் தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்.

அவர்களுடைய கோரிக்கைகள் அல்லது போராட்டங்கள் என்பவை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதைவிட்டு இவ்வாறான செயற்பாடுகளால் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே?

பாடசாலையில் அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமது பாடசாலையின் சுற்றுச் சூழலை பாதுகாப்பாகவும் மிகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து டெங்குக்கு எதிராக செயற்பட வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே இதனை ஒழிக்க முடியும். தனியாக அரசாங்கத்தால் மாத்திரம் இதனை செய்ய முடியாது.

இன்று பழ்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சிற்கள் புகுந்து அங்குள்ள கட்டிடங்களுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கின்றார்கள். இவை பிழையான செயற்பாடுகள் முன்னுதாரணங்கள். பழ்கழைக்கழக மாணவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள்.போராட்டங்கள் நடாத்துவது கருத்துக்களை வெளியிடுவது இவை ஜனநாயக ரீதியான செயற்பாடுகள். ஆனால் வன்முறையில் ஈடுபடுவது பிழையான செயற்பாடுகள்.எனவே இதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment