அனைத்து பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது

263 0

பல்கலைகழக மாணவர்கள் பலவந்தமாக சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த போது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் காவற்துறையின் பாதுகாப்புடன் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரியை மூடுவது தொடர்பில் கடந்த தினம் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடும் நோக்கில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ சங்கங்கள் சுகாதார அமைச்சுக்குள் முன்பாக ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து, பலவந்தமாக சுகாதார அமைச்சுக்குள் உள்நுழைந்த மாணவர்களை வெளியேற்றுவதற்காக காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தடியடி தாக்குல்களை நடாத்தினர்.

இதன்போது காயமடைந்த காவற்துறையினர் உள்ளிட்ட 96 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதார அமைச்சினுள் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையால் அதன் உடமைகளுக்கும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சின் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதேவேளை இந்த விடயம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

எனினும் ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன, உரிய நேரத்தில் சபையில் இருக்காத காரணத்தால், நேற்று இந்த விவாதம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அந்த விவாதத்தை இன்று நடத்த சபாநாயகர் அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment