இலங்கை வரவுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

308 0

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் புதிய துறைகளில் உறவுகளை கட்டியெழுப்புதல் என்பன ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜய நோக்கமாக அமைந்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தியோகப்பூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தார்.

இலங்கை – ரஷ்ய 60 ஆண்டு இராஜதந்திர வரலாற்று நினைவுகளுடன் இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான கல்வி, விவசாய, சுற்றுலாத்துறை, கைத்தொழில், சக்திவலு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியான பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பலதரப்பட்ட விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் இந்த விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

43 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு அழைக்கப்பட்டமையானது முக்கியமானதாக கருதப்பட்டுள்ளது. பல உலக நாடுகள் இலங்கையில் பல்வேறு துறைசார் திட்டங்களை முன்னெடுக்கின்ற நிலையில் அந்த வரிசையில் ரஷ்யாவும் தற்போது ஈடுப்பாடுடன் செயற்பட ஆரம்பித்துள்ளது. அத்துடன் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின் பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்திருந்து.

மேலும் ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அனைத்துலக கடல்சார் மற்றும் விமான கண்காட்சியின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இதற்கான இணைந்து வரைவு உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்  சில தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மாத்திரம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது இந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment