வடமாகாண முதல்வருக்கும், வடமாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என பொதுபலசேனாவின் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் ஜபுரேவல சந்தரதன தேரர் இதனை தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அண்மையில் வடமாகாணசபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு அமைச்சர்கள் இருவரை பணி நீக்கம் செய்ததோடு, இருவரை விடுமுறையில் வடக்கு முதல்வர் அனுப்பிவைத்தார்.
இங்கு எத்தகைய கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் தமிழர்கள் என்ற ரீதியில் அவர்கள் அந்த பிரச்சினையை ஒற்றுமையாக எதிர்கொண்டார்கள்.
தமது பலவீனங்களை வெளிப்படுத்தவில்லை. தமிழர் என்ற ரீதியில் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த விடயம் சந்தோசத்தை தருகின்றது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
அதேபோல முஸ்லிம் மக்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு வருகின்றனர். ஆனால் பௌத்த இனத்திடையே மட்டுமே ஒற்றுமை இல்லாது காணப்படுகின்றது.
நாட்டில் பௌத்தம் இப்போது அழிக்கப்பட்டு வருகின்றது. இப்போதைய அரசு அதற்கு இடம் கொடுத்து கொண்டே வருகின்றது.
பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பரப்பி பிக்குகளைத் தண்டிப்பதை மட்டுமே இப்போதைய அரசு செயற்படுத்திக் கொண்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

