3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது விவகாரம்: அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் வாக்குவாதம்

6153 148

புதுக்கோட்டையில் 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் மு.க.ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் மெய்யப்பநாதன் பேசும் போது, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு நிதி ஒதுக்கியவர் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிட்டார்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு கூறியதாவது:-

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் அம்மாதான். அதற்கு நிதி ஒதுக்கியதும் அம்மாதான். அதற்கு தி.மு.க. ஆட்சியில் ஒரு காசு கூட ஒதுக்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியின்போது 5 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதாக அறிவிப்பை மட்டும் செய்து விட்டு போய் விட்டார்கள். அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியது அம்மாவின் அரசுதான். அதில் தி.மு.க. உரிமை கொண்டாட முடியாது.

மு.க.ஸ்டாலின்:- புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அடிக்கல் 26-2-11 அன்று நாட்டப்பட்டது. இதில் அதிகாரிகள், சட்டமன்ற செயலாளர், அனைவருமே கலந்து கொண்டார்கள்.

அமைச்சர் விஜய பாஸ்கர்:- கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட வேண்டுமென்றால் நிதி ஒதுக்கீடு செய்து இடம் கண்டறியப்பட்டு டெண்டர் விடப்பட்டு அதன் பிறகுதான் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்.

ஆனால் ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார்கள். ஆனால் முறைப்படி அந்த திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி முடித்து இருப்பது அம்மாவின் அரசு. இதில் தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது.

மு.க.ஸ்டாலின்:- சமீபத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த பிரச்சனை அறிந்து சட்டமன்றத்தில் நான் பேச முயன்றபோது அனுமதி வழங்கவில்லை. 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்று இருந்தது.

அமைச்சரும் அவர்களை போனில் தொடர்பு கொண்டு அழைத்து இருக்கிறார். எனவே அவர்கள் விழாவுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் வழியிலேயே போலீசார் அவர்களை கைது செய்து ஒரு மண்டபத்தில் உட்கார வைத்து விட்டார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- எதிர்க்கட்சி என்றாலும் மக்கள் பிரச்சனையில் இணைந்துதான் செயல்படுகிறோம். ஆய்வுகள் நடைபெறும் போதும் கூட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை உடன் அழைத்து செல்கிறோம். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி திறப்பு விழாவின்போது 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெயரை அழைப்பிதழ் போட்டு இருந்தோம். நானும் அவர்களை போனில் விழாவுக்கு அழைத்தோம்.

கலெக்டரும் அழைத்தார். அந்த துறை செயலாளரும் அழைத்தார். ஆனால் முதல்-அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால்தான் போலீசார் அந்த கைது நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள். மேடையில் இருந்த எங்களுக்கே முதலில் அது தெரியாது.

புதுக்கோட்டையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று கூறியதை நானே தொலைக்காட்சியில் பார்த்தேன்.

மு.க.ஸ்டாலின்:- ஆர்ப்பாட்டத்தின்போது நான் அப்படி பேசியது உண்மை தான். ஆனால் விழாவுக்கு அழைக்காவிட்டால் முதல்- அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றுதான் பேசினேன். ஆனால் அழைப்பிதழில் அவர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது. அமைச்சரே போன் செய்து அழைத்து இருக்கிறார். எனவே கருப்பு கொடி காட்ட வேண்டிய அவசியமே எழவில்லை.

விழாவில் பங்கு பெற இருந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் பேச வாய்ப்பு கிடைத்தால் உங்கள் தொகுதி பிரச்சனை பற்றி பேசுங்கள் என்று கூறி இருந்தேன்.

விஜயபாஸ்கர்:- முதல்- அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாலும், விழாவுக்கு எந்த குந்தகமும் ஏற்பட்டு விட கூடாது என்பதாலும் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- நிகழ்ச்சியில் பங்கு பெறும் எம்.எல்.ஏ.க்கள் இந்த புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி வருவதற்கு காரணம் தி.மு.க. என்று பேசி விடுவார்கள். அது தொடர்பான பல்வேறு வி‌ஷயங்களை வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்ற காரணத்தினால்தான் வேண்டுமென்றே அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a comment