ஸ்ரீலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகளவு மொறவக்க, வரல்ல, பிட்டபெத்தர, கள்தொல, பல்லேகம, மெதேரிபிட்டிய, கொலவெனிகம, அகுரஸ்ஸ, தெனியாய, மாத்தறை, சியம்பலாகொட, கொடபிட்டிய ஆகிய பகுதிகளில் 41000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுகள் கிடைக்கின்ற போதிலும், ஏனைய வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொறவக்க கந்த மலையில் மண்சரிவு ஏற்பட்டதில் 25 பேர் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரையில் 21 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, மண்ணில் புதையுண்ட 25 பேரில் 9 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை மீட்கும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

