பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு ; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

448 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பிற்கு எதிராக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

துறைமுக விஸ்தரிப்பினால் 750 ற்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுக விஸ்தரிப்பிற்குள் மீனவர்கள் தொழில் செய்யும் பகுதி உள்வாங்கப்படவுள்ளது.

இதனால் மீனவர்கள் தமது படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து பருத்தித்துறை கொட்டடி கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் முனை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பருத்தித்துறை கொட்டடி கடற்தொழிலாளர் சங்கத்திற்கு முன்னால் ஆரம்பமாகி, பேரணியாக சென்று பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது.

மீனவர்களின் படகு நிறுத்தும் இடம் துறைமுக அபிவிருத்தியினால் சுவிகரிக்கப்படும் பட்சத்தில் மீனவ குடும்பங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வடமராட்சி சமாச தலைவரும் முனை சங்க தலைவருமான வ. அருள்தாஸ் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆர்ப்பாட்டக்கார்கள் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரின் பிரதிகள், மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆகியோரும் கையளிக்கப்படவுள்ளன.