நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்கியிருக்காது பாதிக்கப்பட்ட தமது பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அசாதாரண காலநிலையால் பாரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ள பிரதேசங்களில் தொலை நோக்குடன் செயற்படுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்கியிருக்காது, நேரடியாக மக்களுடன் களத்தில் இறங்கி உரிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனரமைத்துக்கொடுக்கும் தேசிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற தகவல்களின் பிரகாரம் குறித்த செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக நிதியை பெற்றுக்கொடுக்கவும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கும் விரைவில் தீர்மானங்கல் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர நாடு முழுவதிலும் அடிக்கடி ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாவட்ட மட்டத்திலான செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அடுத்துவரும் அமைச்சரவை சந்திப்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுற்றரிக்கைகளை கருத்திற்கொள்ளமால் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு அரச பணியாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

