அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது இதுவரை காலமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பணியாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னைய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் காலத்தில் அரச ஊடக நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர், பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகத்தை மாற்றுவதில் ஊடகத்துறை புதிய அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதன் பிரகாரம் அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உள்ளிட்ட அரசியல் நியமனம் பெற்ற உயரதிகாரிகள் தங்கள் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவர் பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சிறுபான்மை இனத்தவருக்கு உரிய வாய்ப்பளிக்கப்படாத நிலையில், அமைச்சர் மங்கள சமரவீர அதனை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

