திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்விதம் முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ வைத்து முன்னேற முடியாது என்ற செய்தியை சமூகமயப்படுத்த வேண்டியதே காலத்தின் தேவை என்று மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜய உந்துபிடிய தெரிவித்தார்.
அண்மைக் காலமாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், மதஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து நேற்று தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக நாடுகள் எல்லைகளை கடந்து ஒன்றுபடுகின்ற இக்காலத்தில் இலங்கையர்கள் இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்துக்கொள்ள முயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் பிறக்கும்போது குறித்த இனமோ, மதமோ வேண்டுமென்று இறைவனுக்கு விண்ணப்பம் சமர்ப்பிப்பதில்லை. நாம் எதிர்பாராதவிதமாகவே ஏதோவொரு மதத்தை இனத்தை சார்ந்துள்ளோம் என்ற சிந்தனை மாற்றம் மக்கள் மத்தியில் வரவேண்டும். முஸ்லிம்கள் வியாபாரத்துக்காகவே இலங்கைக்கு வந்தவர்கள். அவர்கள் வியாபாரத்தில் திறமைசாளிகள். முஸ்லிம்களின் மதத்தின் பிரகாரம் அவர்கள் வட்டி எடுப்பதோ, கொடுப்பதோ இல்லை. முஸ்லிம்களின் வியாபார முன்னேற்றத்தைப் பார்த்து ஏனையோர் பொறாமைகொள்கின்றனர். உண்மையில் பொறாமை கொள்வதைத் தவிர்த்து அவர்கள் முன்னேறிய விதத்தில் முன்னேற முயற்சிக்க வேண்டும்- என்றார்

