சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, 250 லட்சம் ருபா செலவு செய்தார்

227 0

2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 250 லட்சம் ருபாவை செலவு செய்தாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தினால் பிரான்ஸின் பரிஸ் நகரில் சர்வதேச விசாகப் பண்டிகை நடைபெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட இலங்கையின் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப் பயணம் மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஷிரந்தி ராஜபக்ஷ, பிரான்ஸின் பிரபல விருந்தகமான ஜோர்ஜ் ஸ்டேன்ஸ்ஸில் தங்கியிருந்தார்.

இந்த விருந்தகத்தில் தங்குவது அதிக செலவை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால், பிரித்தானிய மகாராணிகூட அதில் தங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விருந்தகத்தில் ஒரு இரவு தங்குவதற்கான செலவு இல்ஙகை ரூபாவில் 40 லட்சத்தை விட அதிகமாகும்.

இந்தச் செலவானது இலங்கையில் பாடசாலையொன்றில், விஞ்ஞான ஆய்வுகூடமொன்றையோ அல்லது விளையாட்டு மைதானமொன்றை அமைக்கும் செலவுக்கு நிகரானதாகும்.

இதேவேளை, இந்த சுற்றுப்பயணத்தின்போது வாகனங்களுக்காக மாத்திரம் 75 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளனார்.