நூறுகோடி மக்களின் தலைவரை அணித் திரண்டு வரவேற்போம்

210 0

உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கு வரும் போது 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் சார்பாக அணிதிரண்டு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் மலையக விஜயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் நேற்று (05) டிக்கோயாவில் இடம்பெற்றது.

இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு பிரதமராவதற்கு முன்னர் 1939 ஆம் ஆண்டு மலையகத்துக்கு விஜயம் செய்திருந்தார். அவர் பிரதமராக இருந்த போது 1957 இல் மீண்டும் மலையகம் வந்திருந்தார். அவரது விஜயத்தின் போது வர்த்தக சமூகத்தினரையே சந்தித்தார்.

எனினும், தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பிரதமர் ஒருவர் மலையக தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க மலையகத்துக்கு வருகை தருவது இதுவே முதன் முறையாகும். எதிர்வரும் 12 ஆம் திகதி இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள டிக்கோயா வைத்தியசாலையை திறந்து வைத்த பின்னர் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

அவர் குறுகிய நேரமே மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டாலும் அவரின் வருகை எம்மைப் பொறுத்த வரையில் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். எமது மக்களின் சார்பில் பல கோரிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் மோடியிடம் கையளிக்கவுள்ளது.

இன்று இந்திய அரசாங்கத்தின் 4 ஆயிரம் தனி வீடுகளோடு எமது அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் தனி வீட்டுத் திட்டம் மும்முரமாக முன்னெடுத்து வரப்படுகின்றது. எனவே, இவற்றுக்கு மேலதிகமாக இந்திய அரசின் வீடுகள் மேலும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர, மலையக மாணவர்களின் உயர்கல்வி, தொழிற் பயிற்சி முதலானவற்றுக்கும் நாம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம் என மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.