நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயன்முறை மற்றும் உலகின் புதிய போக்கு ஆகியவற்றை அறிந்து தெரிந்து, பொறுப்பு மிக்கதொரு சமூக சக்தியாகத் தொழிலாளர்கள் செயற்படுவர் என எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொருளாதார சுபீட்சத்தை அடைதல் உள்ளிட்ட நாடு எதிர்நோக்கியிருக்கும் சவால்களை வெற்றி கொள்ளும் செயற்பாடுகளிலும், தொழிலாளர் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு கைவிடமுடியாததாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உழைப்பினால் உருவாக்கப்பட்ட மேற்கட்டுமானமானது, மனித உழைப்பின் பெருமைமிக்க உன்னதத் தன்மை முன் மண்டியிட்ட வரலாற்றுரீதியான நிகழ்வை நினைவுகூரும் முகமாக கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் சகோதர தொழிலாளர் சமூகத்துக்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“1917 ஆம் ஆண்டு நிகழ்ந்த உன்னத ரஷ்யப் புரட்சியின் வெற்றிகரமான நூற்றாண்டுப் பூர்த்தியடையும் இவ்வாண்டில் கொண்டாடப்படும் மே தினமானது, பலமான உந்துசக்தியை, எம் அனைவருக்கும் பெற்றுக் கொடுத்துள்ளது. அந்த உற்சாகத்துடன் இன்று, மே தினத்தினைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்துக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், தமது வியர்வையையும் கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்த, உயிர்த்தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. –

