போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு ஊரணியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனத்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன், மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

