முன்னாள் போராளிகளுடைய அரசியல் வாழ்கைக்காக சரியான நேரத்தில், சரியான விதத்திலே கதவுகளை திறந்து அவர்களை உள்ளீர்ப்போம்

287 0

முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாடு நேற்றிரவு நடைபெற்றது. இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்.

குறிப்பாக, முன்னாள் போராளிகளுடைய அரசியல் வாழ்கைக்காக சரியான நேரத்தில், சரியான விதத்திலே கதவுகளை திறந்து அவர்களை உள்ளீர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், நிலம் தொடர்பான முழுமையான தகவல்களுடன் ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு செயலாளருடனும் எதிர்க்கட்சித் தலைவரை பேச்சுவார்த்தை நடாத்துமாறும், உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

அத்தோடு, காணி விடுவிப்பு, பட்டதாரிகளின் பிரச்சினை, இடம்பெயர்ந்தோர் பிரச்சினை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், கட்சியின் தலைவரிடம் அல்லது கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களிடம் முறையிடலாம் என்றும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.