ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களும் சர்வதேச பௌத்த மாநாடும், எதிர்வரும் மே மாதம் 12ஆம், 13ஆம் மற்றும் 14 ஆகிய தினங்களில் மிகக் கோலாகலமாக இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மே மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகின் பல பௌத்த நாடுகளையும் சேர்ந்த விசேட பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். நிறைவு நாள் வைபவம், வரலாற்றுப் பிரசித்திப்பெற்ற கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ளது.
மே மாதம் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலம் வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனுடன் இணைந்ததாக, பத்தரமுல்ல அபேகம வளாகத்துக்கு அண்மையில் பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தியவன்னா வெசாக் வலயமும் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இச்செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்பு தொடர்பான நீண்ட கலந்துரையாடல், நேற்று இடம்பெற்றதுடன், உலக வாழ் பௌத்த மக்களின் தரும சிந்தனைகளும், பௌத்த மதத்தின் புனிதமும் உலகம் முழுதும் கொண்டு செல்லப்படும் வகையில் இந்தச் செயற்றிட்டங்களை ஒழுங்குசெய்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

