திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை

197 0

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,இது தொடர்பான சுதந்திரக் கட்சி கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என ஜனாதிபதி இங்கு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இங்கு பெற்றோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் குறித்து ஆராயப்பட்டது.இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நடக்காத ஒன்றைப்பற்றி கற்பனையாக சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் இல்லை.அரச வளங்களை விற்பதற்கு சுதந்திரக் கட்சி எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சி ஊடக மாநாட்டில் பேசிய அமைச்சர்,

இந்திய கம்பனிக்கு எண்ணெய் குதங்களை வழங்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது பற்றி அமைச்சரவையில் எதுவும் ஆராயப்படவில்லை.

2001 இல் ஒப்பந்தமொன்றினூடாக இந்திய கம்பனிக்கு பங்குகள் வழங்கி நிர்வாகிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அரசுக்கு மூன்றில் இரண்டு பங்குகள் உள்ளன. இந்த நிலையிலே இவற்றை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தயாராவதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது என்றார்.

இந்திய கம்பனிக்கு திருகோணமலை குதங்களை வழங்க பிரதமரின் இந்திய விஜயத்தின் போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருப்பதாக தெரிவித்து பெற்றோலிய தொழிற் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.