ஜனாதிபதியின் கழிவகற்றல் குறித்த வர்த்தமானிக்கு எதிராக போராட வேண்டும் : சோசலிச கட்சி

229 0

கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் ஊடகப்பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

கழிவுப்பொருட்களை அகற்றுவதை அத்தியாவசிய சேவையாக கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வழுந்ததும் அந்தப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கரதியான, தொம்பே போன்ற பிரதேசங்களில் கொட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பிரகாரம் குப்பைகளை ஏற்றிகொண்டு குறித்த வாகனங்கள் அந்த பகுதிகளுகு வரும்போது அந்த பிரதேச மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதி கழிவுப்பொருட்களை அகற்றுவதை அத்தியாவசிய சேவையாக கருதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த சேவைக்கு இடையூறு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் குப்பை மேடு சரிந்ததும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

அதில், இந்த அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம் தண்டனை வழங்குவதாக இருந்தால் அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராகவே ஆரம்பமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.