இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்பு

233 0

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அப் பாராளுமன்றத்தின் 55 உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றே குறித்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும், ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளை செயற்படுத்தல் குறித்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கமைய, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதை தவிர்க்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துமாறு அந்த யோசனையில் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கையின் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த யோசனை ஏப்ரல் 26 மற்றும் 27ம் திகதிகளில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு, இது தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

இதற்கமைய, 751 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 376 வாக்குகளை பெற்றால் குறித்த யோசனை நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த யோசனை வெற்றி பெறும் பட்சத்தில் அது ஐரோப்பிய சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.