மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை – வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் அமரவீர

303 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வை பெற்றுக்கொடுக்கு ஆளும் அரசாங்கம் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இந்த குப்பை மேடு தொடர்பில் நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிலையில் தற்போதாவது தீர்க்க முனைய வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலாக உள்ள நான்கு இடங்கள் பொலித்தினினால் மூடப்பட்டுள்ளன.

தேசிய கட்டட நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆசிரி கருணாவர்தன இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் மழை பெய்தால் குப்பை மேடு சரிந்து வீழ்வதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் பின்னர் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று 10வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்த இதனைத் தெரிவித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் மீதேன் வாயு சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.