காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்

263 0

அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

கொலை செய்துவிட்டோம் என்றோ அல்லது இந்த இடத்தில் தடுத்து வைத்திருக்கிறோம் என்றோ, அரசாங்கம் பதில் கூறினால், அது அரசாங்கத்துக்கே சிக்கலை ஏற்படுத்தும்.

இதனாலேயே அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் உரிய அழுத்தங்களை பிரயோகித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், காணி விடுவிப்பு தொடர்பாக, ஜனாதிபதியுடன் எதிர்வரும் மே 17ம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கேப்பாபுலவு மக்களை நேற்று சந்தித்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே காணி விடுவிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வர வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு தமிழர்கள் அனைவரும் இணைந்து தமது உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வன்னி மண்ணை ஆட்சி செய்த பண்டாரவன்னியனின் உருவச் சிலை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தலைமை அலுவலகத்திற்ககு முன்னாள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.