கடவுச் சீட்டு பெறும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

359 0

ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான ஆரம்ப படிமுறைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

இதன் மூலம் இணையத்தின் ஊடாக கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், இதற்கான கட்டணத்தை கடன் அட்டை மூலம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருட இறுதிக்குள் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டிய கடவுச்சீட்டு தொடர்பான முழு விபரம் !

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது.

கடவுச்சீட்டு என்பது வெளிநாட்டு பயணங்களுக்கான உரிமைகளை வழங்கும் ஒரு அத்தாட்சிப் பத்திரம். கடவுச் சீட்டினை வழங்கும் அதிகாரம் இலங்கையில் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு மாத்திரமே உள்ளது.

கடவுச்சீட்டுக்களில் பல வகைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

—–1—- இராஜதந்திர கடவுச்சீட்டு- இந்த கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு பதவிகளை வகிப்பவர்களுக்கே இந்த கடவுச்சீட்டு வழங்கப்படும்.

—–2—- உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு- இலங்கையின் அரச பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு. மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர்கள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், நாடளாவிய சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இனங்கண்ட பணியாள் குழாமிட்கு மாத்திரமே வழங்கப்படும்.

—–3—- சாதாரண கடவுச்சீட்டு- சாதாரணமாக அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகக் கூடிய கடவுச் சீட்டுகள்.

இவ்வாறான கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய முறைகள்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பத்திரத்துடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

—1— M அல்லது N பிரிவைச் சேர்ந்த கடவுச் சீட்டொன்று ஏற்கனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

—2—விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி

—3—விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும், நிழற்பிரதியும்

—4—விவாகச் சான்றிதழ் இருப்பின்

தொழிலை உறுதி செய்யும் கடிதம், தொழிற் சான்றிதழ் அல்லது அனுமதிப்பத்திரம் விண்ணப்பப்பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம்.

—-1—- கொழும்பு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம்

—-2—- கண்டி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிராந்திய அலுவலகம்

—-3—- வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகம்

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள எடுக்கும் காலம்.

சாதாரண அடிப்படையில் – 10 வேலை நாட்கள்

அவசர அடிப்படையில் – அதே தினத்தில்

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டின் தயாரிப்பு கட்டணம்

சாதாரண அடிப்படையில் – 3000ரூபா (இலங்கை)

அவசர அடிப்படையில் – 10,000ரூபா (இலங்கை)

குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியான கடவுச்சீட்டு

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஒரு சில தெற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்ய ஏதுவான கடவுச் சீட்டு.

நாடுகளின் பெயர் பட்டியல்

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மாலைத்தீவுக் குடியரசு, ஈரான், ஈராக், லெபனான், சிரியா, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ், ஓமான், குவைத், கட்டார், பஹ்ரேன், யேமன்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள

—1—M அல்லது N பிரிவைச் சேர்ந்த கடவுச் சீட்டொன்று ஏற்கனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

—2—புகைப்பட ஸ்டுடியோ ரசீது

—3—விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி

—4—விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும், நிழற்பிரதியும்

—5—விவாகச் சான்றிதழ் இருப்பின்

தொழிலை உறுதி செய்யும் கடிதம், தொழிற் சான்றிதழ் அல்லது அனுமதிப்பத்திரம் விண்ணப்பப்பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம்.

––1—கொழும்பு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம்

—2—கண்டி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிராந்திய அலுவலகம்

—3—வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகம்

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள எடுக்கும் காலம்.

சாதாரண அடிப்படையில் – 10 வேலை நாட்கள்

அவசர அடிப்படையில் – அதே தினத்தில்

கடவுச்சீட்டின் தயாரிப்பு கட்டணம்

சாதாரண அடிப்படையில் – 1000ரூபா (இலங்கை)

அவசர அடிப்படையில் – 2,500ரூபா (இலங்கை)

இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச் சீட்டு மற்றும் தற்காலிக பயண ஆவணம்

கடவுச்சீட்டினை தொலைத்த அல்லது களவாடப்பட்ட அல்லது வெளிநாட்டில் இருக்கும் போது காலாவதியாகியுள்ள வேளையில் இலங்கையருக்கு விநியோகிக்கப்படும் அனுமதிப்பத்திரம். இதனை வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் மீண்டும் சிலகாலத்திற்குள் இலங்கைக்கு திரும்பிவர எதிர்பார்ப்பீர்களாயின் நீங்கள் இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டிற்கு அல்லது தற்காலிக பயண, ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டல்லாத தற்காலிக பயண ஆவணம் இலங்கைக்கு ஒரு தடவை பயணஞ் செய்ய மாத்திரமே செல்லுபடியாகும்.

இதற்கான விண்ணப்ப பத்திரத்தினை வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்ப பத்திரத்தினை இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்க முடியும்.

அடையாளச் சான்றிதழ்

வெளிநாட்டவரொருவரின் கடவுச்சீட்டு தொலைந்து போயுள்ளவிடத்து அல்லது இலங்கையில் இருக்கும் போது காலாவதியானால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

இந்த அடையாளச் சான்றிதழை கொழும்பு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ரூ. 3000/- ஐ செலுத்தி அன்றைய தினத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

6.பராயமடையாத விண்ணப்பதாரிகள் / மகவேற்பு விண்ணப்பதாரர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு

16 வயதுக்கு குறைந்த எந்த ஒருவரும் இதன் பொருட்டு பராயமடையாதோராகக் கருதப்படுவர். விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் பொருட்டு விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்கப்படுகின்ற அலுவலகத்திற்கு விண்ணப்பதாரி வரும்போது தமது பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலருடன் வருகை தரல் வேண்டும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமொன்று விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பிறப்புச் சான்றிதழ்

புகைப்பட ஸ்டுடியோ ரசீது

பெற்றோரது கடவுச்சீட்டு (தரவுப் பக்கத்தினதும் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தினதும் நிழற்பிரதிகளுடன்).

பெற்றோருக்கு கடவுச்சீட்டு இல்லாவிடின் சத்தியக் கடதாசியுடன் தேசிய அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பெற்றோரது விருப்பம் தெரிவிக்கும் கடிதம்.

மகவேற்புப் பிள்ளைக்காக கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் கீழ்க்காணும் மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.

மகவேற்புச் சான்றிதழ்.

அதற்கான நீதிமன்றக் கட்டளை.

நன்னடத்தை, சிறுவர் பாதுகாவல் ஆணையாளரது கடிதம்.

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான கட்டணம் (16 வயதிற்கு கீழ்)

3 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை – 2000.00

ஒரு நாள் சேவை – 5000.00

10 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை – 3000.00

ஒரு நாள் சேவை – 10000.00

குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்கான கடவுச்சீட்டினை தயாரித்தல் கட்டணம் (16 வயதிற்கு கீழ்)

3 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை – 1000.00

ஒரு நாள் சேவை – 1500.00

10 வருட செல்லுபடிக் காலம்

சாதாரண சேவை – 1000.00

ஒரு நாள் சேவை – 2500.00

இரட்டைப் பிரசாவுரிமை கொண்டுள்ளவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு

இலங்கையிலும் வேறொரு நாட்டிலும் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

—1—பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரம்.

—2—புகைப்பட ஸ்டுடியோ ரசீது

—3—இரட்டைப் பிரசாவுரிமைச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும். (1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க திருத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட ஒருவராக இருப்பின், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டதன் பின் புதிதாக தேசிய அட்டையொன்றைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்)

—4—குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய நாட்டின் கடவுச்சீட்டும், இலங்கைக் கடவுச்சீட்டொன்று இருப்பின் அக் கடவுச்சீட்டும் (வாழ்க்கைத் தரவு விபரங்கள் அடங்கிய பக்கங்களின் நிழற் பிரதிகளுடன்)

—5—தேசிய அடையாள அட்டையும் அதன் நிழற் பிரதியும்.

—6—பிறப்புச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும்.

களவாடப்பட்ட அல்லது காணாமற் போன கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு காணாமல் போய்விடின் அது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறைபாடு செய்ய வேண்டும். காணாமற் போன கடவுச்சீட்டு சட்ட விரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பின் நீங்கள் அவற்றிட்கு உதவியவராக கருதப்படுவீர்கள்.

இலங்கையில் இருப்பவரெனின்,

தங்களுடைய கடவுச்சீட்டு களவாடப்பட்டிருப்பின் அல்லது காணாமற் போயிருப்பின் நீங்கள் அது பற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 011 532 9502 தொலைநகல் 011 532 9501 ஊடாக தெரிவிக்கலாம். அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வார நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணி முதல் 4.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இயன்றளவு துரித கதியில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.

தங்களது முறைப்பாட்டின் விபரங்களை பொலிஸார் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறியத் தருவர்.

பொலிசாரின் மூலமாக தகவல்களைப் பெற்றுக் கொண்ட உடனேயே தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டினை இரத்துச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

களவாடப்பட்டதாகஅல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்தப்பட முடியாது. கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்ட தகவல் தவறான பிரயோகங்களினைத் தவிர்ப்பதற்காக உலகம் முழுவதும் பகிரப்படும்.

காணாமற் போன கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம். அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக புதிய கடவுச்சீட்டினை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

வெளிநாடொன்றில் வசிப்பவராயின்,

நீங்கள் வசிக்கும் நாட்டில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்து பொலிஸ் அறிக்கையினைப் பெற்றுக் கொள்ளவும்.

முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட முறைப்பாட்டு படிவத்துடன் பொலிஸ் அறிக்கையையும் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது கொன்சியுலர் அலுவலகத்தில் கையளிக்கவும்.

இலங்கைத் தூதரகம் அல்லது கொன்சியுலர் அலுவலகம் தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய தகவல்களை இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறியத் தருவர். அவ்வாறு தகவல்களைப் பெற்றுக் கொண்ட உடனேயே தங்களது களவாடப்பட்ட, காணாமற் போன அல்லது தவறவிடப்பட்ட கடவுச்சீட்டினை இரத்துச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

களவாடப்பட்டதாகஅல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்தப்பட முடியாது.

கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்ட தகவல் தவறான பிரயோகங்களினைத் தவிர்ப்பதற்காக உலகம் முழுவதும் பகிரப்படும். காணாமற் போன கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்.

அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக புதிய கடவுச்சீட்டினை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பிறிதொரு நபரின் தவறவிடப்பட்ட இலங்கைக் கடவுச்சீட்டு தங்களால் கண்டெடுக்கப்படின், அதனை உறுதியான கடித உறையில் இட்டு கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தொலைந்து போன / காணாமற் போன கடவுச்சீட்டு மேசை, 3 மாடி

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்

“சுகுறுபாய”,

பத்தரமுல்லை,

இலங்கை.

உங்கள் கவனத்திற்கு..

களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டினை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்.

களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு செல்லுபடியற்ற தாக்கப்படுவதினால் தொடர்ந்தும் பிரயாணத்திற்காக பயன்படுத்தப்பட முடியாது.

களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக தங்களால் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு பற்றிய விபரங்கள் எமது களவாடப்பட்டதாக / காணாமற் போன கடவுச்சீட்டு பற்றிய எமது தரவுத் தொகுதியில் உள்ளடக்கப்படுவதுடன் அவை சர்வதேச பொலிசினூ டாக உலகம் முழுவதும் பகிரப்படும்.

களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு தங்களால் மீண்டும் கண்டெடுக்கப்படின் அதனை மேற்கூறப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அவ்வாறு கையளிக்கும் போது தங்களால் கோரப்படுமாயின் இரத்துச் செய்யப்பட்டப் பின் அது மீண்டும் தங்களிடம் கையளிக்கப்படும். அவ்வாறில்லையாயின் அது அழிக்கப்படும்.

களவாடப்பட்டதாக அல்லது காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டு மீண்டும் செல்லுபடியானதாக்கப்பட முடியாது.