மீதொட்டமுல்லை மாணவர்களின் கல்வியை சிரமமின்றி தொடர நடவடிக்கை

216 0

மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விஷேட வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

எனவே, இதற்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள கொழும்பு மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

இதற்கமைய, எதிர்வரும் 26 ம் திகதி தொடங்கப்படவுள்ள 2ம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் எந்தவித சிரமமும் இன்றி, மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பங்கு பற்ற தேவையான வகையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை விரைவில் வழங்கி வைக்கவுள்ளதாக, கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கண்ணங்கர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீதொட்டமுல்லை பகுதியிலுள்ள அவதானத்திற்குரிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேற்றத் தேவையான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அவதானத்திற்கு உரியது என கணிப்பிடப்பட்ட பகுதிகளில், மக்களை வௌியேறுமாறு பிரதேச செயலாளரின் கையெழுத்துடனான அறிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.