இந்த வருடம் முதல் வலுவான பொருளாதார பயணத்திற்கு தயார் – ஜனாதிபதி

261 0

செழிப்பான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அந்நிய செலாவணியானது தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது பாரிய பொருளாதார சிக்கல்கள் காணப்படவில்லை எனவும், நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்காக 12 பில்லியன் ரூபாவை செலுத்திக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய அமைச்சர் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்காக 6 பில்லியன் ரூபாவை உடனடியாக செலுத்த தயாராகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு தரப்பினர் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், தமது சொத்துக்களை விற்பனை செய்வதற்கான தீர்மானம் தமக்கு கிடையாது எனவும், அந்த விடயம் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வரலாற்றில் இடம்பெற்ற பாரிய காட்டிக் கொடுப்பு துறைமுக நகர் திட்டம் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். அதன்படி, கடந்த அரசாங்கம் துறைமுக நகர் திட்டத்திற்காக 200 ஏக்கர் நிலப் பரப்பை குத்தகைக்கு வழங்கியிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் கலந்துரையாடல்களை நடாத்தி அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோல், இராணுவத்திற்கு அதிக பாதுகாப்பை வழங்கியது இந்த அரசாங்கம் எனவும், எந்தவொரு நபரையும் இந்த அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரச நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை மாற்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் புதிய கோணத்தை நோக்கி செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, வெசக் பூரணை தினத்திற்கு முன்னர் அதனை எதிர்பார்க்க முடியும் என பதிலளித்துள்ளார். இதேவேளை, மாலபே சைட்டம் நிறுவனத்தை ஒரு நபரின் உரிமத்திலிருந்து ரத்து செய்து, சுயாதீன பேரவையின் கீழ் செயற்படுகின்ற விதத்திலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சைட்டம் நிறுவனத்தில் உயர்தரத்தில் மூன்று சாதாரண சித்திகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் உள்ளதாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதன்போது நிராகரித்துள்ளார். எனினும், அரச நிறுவனங்களில் உயர்தரத்தில் மூன்று சாதாரண சித்திகளை பெற்ற மாணவர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்.

அத்துடன், மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு பொறுப்பு கூற வேண்டியோர் குறித்து ஆராய்வதற்கான ஓய்வூ பெற்ற நீதிபதியொருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தனக்கு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் இரு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 45 லட்சம் ரூபா பெறுமதியான 98 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான வீட்டு உபகரணங்களை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். அத்துடன், கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் சமர்ப்பிக்க முடியாது போனதாகவும், அதனை வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அரச பிரிவுகளை தெளிவூட்டுவதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.