வடக்கில் படுக்கை நோயாளிகளின் பராமரிப்பு பணிக்கு 66 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

270 0
வட மாகாணத்தில் உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்க மத்திய சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தில் அதிகமாக உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக எமக்கு 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கி உதவுமாறு அண்மையில் வடக்கிற்கு வருகை தந்த மத்திய சுகாதார அமைச்சரிடம் ஓர் கோரிக்கை விடப்பட்டதோடு அது தொடர்பில் நேரிலும் சில இடங்களிற்கு அழைத்து சென்று கான்பித்திருந்தோம்.இதன் பிரகாரமே குறித்த  இணக்கத்தினை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தற்போது வட மாகாணத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை நோயாளர்கள் யுத்தம் மற்றும் விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்கு மாதாந்தம் வீடுகளிற்றே நேரில் சென்று வைத்திய வசதிகளையும் உள மருத்துவமும் அளிக்கும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான ஏற்பாடுகளின் கீழ் அதிகமான நோயாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே உள்ளனர். யார்.ப்பாணத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களை பராமரிக்கும் பொறுப்பினை ஐ.எம்.எச்.ஓ என்னும் நிறுவனம் ஏற்கனவே பொறுப்பெடுத்துள்ளது.
அதேபோன்று கிளிநொச்சியில் உள்ள 186பேரையும் மாதம் ஒருமுறை சென்று பார்வையிட்டு பராமரிக்கும் வைத்திய அணிக்கான செலவினை கனடா வாழ் அருள்குமரன் என்னும் தனி ஒருவர் பொறுப்பெடுத்துள்ளார். அதேபோன்று முல்லைத்தீவில் உள்ள 150 பேரையும் மாதாந்தம் ஒருமுறை சென்று பார்வையிட்டு பராமரிக்கும் வைத்திய அணிக்கான செலவினை கனேடிய தமிழ் தேசியப் பேரவை என்னும் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதனால் எஞ்சிய இரு மாவட்டங்களான வவுனியா , மன்னார் மாவட்டங்களிலும் யாழ்ப்பாணத்தில் 3 பிரதேச செயலாளர் தவிர்ந்து ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ளவர்களை பராமரிப்பதற்கான அணிக்குரிய கொடுப்பனவுகளை பொறுப்பேற்குமாறே கோரிக்கை விடப்பட்டிருந்த்து.
அதற்கான செலவாக ஆண்டிற்கு 6 மில்லியன் ரூபா தேவைப்பட்டது . அதனை உடன் விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். இதேபோன்று இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிற்கான விசேட கழிப்பறை வசதிகள் வேண்டும். அவற்றினை அமைப்பதானால் அதற்கும் 60 மில்லியன் ரூபா தேவை என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தோம். அவற்றினையும் உடனடியாகவே வழங்க தற்போது மத்திய சுகாதார அமைச்சர் அனுமதித்துள்ளார்.
இதன் காரணமாக மாகாணத்தில் நிலவிய இவ்விரு முக்கிய பணிகளிற்குமான நிதிகளை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையினால் எதிர் வரும் மே மாதம் முதல் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும். என்றார். –