உயர் காவல்துறை அதிகாரியாக செயற்பட்டு கான்ஸ்டபிளிடம் பண மோசடி

367 0

புத்தளம் பிரதி காவல்துறை மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் சிலாபம் பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரிடம் 24,000 ரூபா வரை நிதி மோசடி செய்துள்ளார்.

தமக்கு அவசர தேவையான பணம் வேண்டும் எனவும், ஈஸி கேஷ் முறையில் தமக்கு பணத்தை அனுப்புமாறும் தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் கோரியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை (17) 5.40 அளவில் சிலாபம் நகரில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பை ஏற்படுத்தியவர் தம்மை, புத்தளம் பிரதி பொலிஸ் மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

அத்துடன், குறித்த தொலைபேசி அழைப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபராக அடையாளப்படுத்திக் கொண்ட பிறிதொருவரும் பேசியுள்ளார். தனது தனிப்பட்ட உதவியாளரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மால் குறிப்பிடப்படும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு 24,000 ரூபாவை ஈஷி கேஷ் மூலம் வைப்பிலிடுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தாம் சில மணித்தியாலங்களின் பின்னர் சிலாபம் ஊடாக கொழும்பு செல்லவிருப்பதால் அந்த பணத்தை மீளத் தருவதாக அந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து சிலாபத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபி;ள் 9000 மற்றும் 15000 என இரண்டு இடங்களில் ஈஷி கேஷ் மூலமாக பணப் பறிமாற்றம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த தொலைபேசி எண்ணில் இருந்து எந்தவொரு தொலைபேசி அழைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொலி;ஸ் கான்ஸ்டபில் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் உயர் பொலிஸ் அதிகாரியாக தம்மைக் காட்டிக் கொண்டு ஒரு மோசடி குழுவினர் பணம் கோரி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.