ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் குற்றவாளியாக சேர்ப்பு

232 0

ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக லஞ்ச-ஊழல் வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்மாதம் பத்தாம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பார்க் கியூன் ஹே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக விசாரணை முகமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த விசாரணையின்போது அவர் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சியோல் நகரில் உள்ள சிறைச்சாலையில் 10.6 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சராசரி கைதிபோல் அவரது மேல்சட்டையில் கைதி எண்: 503 என்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான சோய் சூன் சில்-லுக்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச-ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே இன்று குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றப்பத்திரிகையை அரசின் மூத்த வழக்கறிஞர் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அவர் மீதான குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் பத்தாண்டு காலத்துக்கு அவர் சிறைக்குள் அடைபட்டு கிடக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.