வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்

1418 0

வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்’ என்றார் அறிஞர் அண்ணா. அத்தகைய நூலகத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.. வாரீர். “லிபர்” என்கிற இலத்தின் சொல்லுக்கு புத்தகத் தொகுதி என்று பொருள். அதிலிருந்தே ‘லைப்ரரி’ என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது.

உலகின் முதல் நூல் நிலையம் கி.மு.2500 ஆம் ஆண்டு பாபிலோனிய அரசால் பாபிலோன் நகரத்தில் நிறுவப்பட்டது. களிமண்ணைக் கொண்டு உருவாக்கிய ‘களிமண் பலகை புத்தகங்களாக’ ஆயிரத்துக்கு மேலான புத்தகங்களைக் கொண்டு இந்நூலகம் நிறுவப்பெற்றது. இந்த களிமண் பலகை புத்தகங்களை அப்போதே நிலை அடுக்குகளில் (அலமாரி) பொருள் வாரியாக சேர்த்து வைத்திருந்தார்கள். இந்நூலகம்  அமில் அனு என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இவரே உலகின் முதல் நூலகராவார். பிரிட்டனில் இன்றும் இந்நூலகத்தில் இருந்த 25 களிமண் பலகை புத்தகங்களை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக அச்சுக்கலை, காகிதம் தோன்றிய பின் தொடங்கப்பட்ட முதல் நூலகம் பிரெஞ்சு நாட்டில் உள்ளது. இது 1480 ஆம் ஆண்டு பதினோராம் லூயி மன்னரால் தொடங்கப்பட்டது. ஆனால் இது அரசர்களுக்காக மட்டுமே உரியதாக இருந்தது. பொது மக்கள் பயன்படுத்தும் வகையிலாக உருவாக்கப்பெற்ற முதல் நூலகம் பாரிசில் உள்ள “போட்லியன்” என்ற நூலகமாகும். இன்றும் இந்நூலகம் இயங்கி வருகிறது.

பாரிசு தேசிய நூலகத்தில்தான் முதன் முதலாக நூல்களுக்கான முறையான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்று நூலகத்தில் உறுப்பினராவதற்கு முன்தொகைக் கட்டணம் கட்டும் முறை உள்ளது. இதை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் மாவீரன் நெப்போலியன் ஆவார். நூலக இயக்கத்தையும் கல்வி வளர்ச்சியையும் இவர்தான் ஒருங்கிணைத்தார். இதற்காக ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்க மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தினார். புத்தகங்களை இரவலாக வழங்கும் போது பெறப்படும் கட்டணத் தொகையைக் கொண்டு மேலும் பல புத்தகங்களை சேகரிக்க கட்டளை பிறப்பித்தார்.

இன்று எல்லா நாட்டு அரசுகளும் மாவீரன் நெப்போலியன் வகுத்த நூலக முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர். உருசியா மீது படையெடுத்த போது கூட, போரில் வெற்றி பெற்று இரண்டு இலட்சம் புத்தகங்களை மட்டுமே எடுத்து வந்து இந்நூலகத்தில் சேமித்தார். மீதி நூல்களை அங்குள்ள மக்கள் படித்திடும் பொருட்டு அங்கேயே விட்டுவிட்டார். காரணம் அவரும் ஒரு புத்தக விரும்பி என்பதனால்.

இன்று நூலகங்களில் மேசைகளை வட்ட வடிவமாக வடிவமைக்கும் முறையை, ஆதியில் தோற்றுவித்தவர்கள் உருசியர்கள்தான். இந்நூலகம் உலக நூலகங்களில் மிகவும் பழமையானதும் விலைமதிக்க முடியாத நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் தன்னகத்தே கொண்ட நூலகமாகத் திகழ்கிறது. பாரிசுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெறின் நெப்போலியன் அமைத்த இத்தேசிய நூலகத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்