டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

271 0

டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து ஆகி உள்ளது. குல்பூஷண் ஜாதவ் விவகாரமே, இதற்கு காரணம்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது.

இது தொடர்பான வழக்கை அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டு அவசர கதியில் விசாரித்து, அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 10-ந் தேதி வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரம், பாராளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. அவரை உயிரோடு மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட்டால், அது திட்டமிட்ட படுகொலையாக அமையும் என்று இந்தியா தனது கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்தி உள்ளது.அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குற்றப்பத்திரிகை மற்றும் ராணுவ கோர்ட்டு உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குமாறு இந்தியா கோரி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய, பாகிஸ்தான் இரு தரப்பு கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடங்க இருந்தது. இந்த பேச்சுவார்த்தை 19-ந் தேதி முடிய இருந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது மீனவர்கள் பிரச்சினை, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க முடிவாகி இருந்தது.

ஆனால் இப்போது குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த இந்தியா விரும்பாமல் ரத்து செய்து விட்டது.பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை (எம்.எஸ்.ஏ.) குழு, இந்தியா வருவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கவில்லை என்று கடலோர பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே. சிங், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குல்பூஷண் ஜாதவை தூதரக வழியாக சந்தித்து பேசுவதற்கு 13 முறை இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி தரவில்லை. ஆனாலும் ஜாதவை சந்திப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஜாதவ், ஈரானில் இருந்துதான் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

1961-ம் ஆண்டு நடந்த வியன்னா தூதரக உறவுகள் மாநாட்டு உடன்படிக்கையின்படி, ஒரு நாடு மற்றொரு நாட்டு குடிமகனை கைது செய்தால், அவரை அந்த நாட்டு தூதரகத்தினர் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச அனுமதி தராமல் பாகிஸ்தான் அடாவடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.