தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

220 0

அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பொய்த்து போனதால், தற்போது தமிழகம் வறட்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால், நாளுக்கு நாள் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை மழை பெய்து தமிழகத்தின் வறட்சியை ஓரளவு சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அந்தமான் தீவு அருகே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அந்தமான் தீவு அருகே தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அது வடக்கு, வடகிழக்கு பகுதியில் நகர்ந்து பர்மா நோக்கி 17-ந் தேதி (நாளை) சென்று அங்கு கரையை கடக்கிறது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பர்மாவை நோக்கி செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கு பெரிய அளவுக்கு மழையும் இருக்காது.

பொதுவாக வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழகம் முதல் கொல்கத்தா கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.