ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது

374 0

201607261105288557_five-lawyers-arrested-clashed-with-police-in-high-court_SECVPFஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் வக்கீல்கள் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. கோர்ட்டில் வாதம் செய்யும் போது, நீதிபதியிடம் குரலை உயர்த்தி பேசக்கூடாது. நீதிபதிகளின் பெயரைச் சொல்லி மனுதாரர்களிடம் பணம் வசூலில் ஈடுபடக்கூடாது, என்பது உள்ளிட்ட 45 அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.இதற்கு தமிழகம் முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்றனர்.இந்த போராட்டம் காரணமாக ஐகோர்ட்டில் உள்ள அனைத்து வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் செல்லும் நுழைவு வாயில் அருகிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. ஐகோர்ட்டு வடக்கு வாசலிலும் வக்கீல்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஐகோர்ட்டில் நுழைந்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அனைத்து வாயில்களிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு வாசல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தள்ளிக் கொண்டு வக்கீல்கள் ஐகோர்ட்டினுள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

வக்கீல்கள் போராட்டத்தை போலீசார் வீடியோவிலும் பதிவு செய்தனர். இதனை போட்டு பார்த்து மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி வீடியோ காட்சிகள் மூலமாக 5 வக்கீல்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் கருணாகரன் மற்றும் வக்கீல்கள் அசோக் குமார், ஓம்பிரகாஷ், கிஷோர், யாசர் அராபத் ஆகிய 5 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கருணாகரன் பழைய வண்ணாரப்பேட்டையிலும், அசோக்குமார் தண்டையார் பேட்டையிலும் வசித்து வந்தனர். மற்ற 3 வக்கீல்களின் வீடும் ராயபுரத்தில் உள்ளது. இவர்கள் அனைவரையும் போலீசார் நேற்று இரவு வீடுகளில் வைத்து கைது செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதான 5 வக்கீல்களும், சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுண் கோர்ட்டு நீதிபதி வடிவேலின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 வக்கீல்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.