50க்கும் மேற்பட்ட நாடுகளில் சமஷ்டி முறைமை உள்ளது

291 0

heinz-walker-nederkoornசுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைபோட்டு ஒட்டமுடியாது. ஆனால் அதிகாரப் பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாகக் கருத்துப்படக் கூறுவது தவறானது. உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடு களில் அதிகாரப்பகிர்வை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார்.

போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்த கால மோதல்களுக்கு தீர்வு காண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தற்போதுள்ள இலக்குகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,இரு நாட்டு உறவுகள் மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது. சுவிஸர்லாந்தை பொறுத்த வரையில் சமஷ்டி நிர்வாகத்தை கொண்ட நாடாகும் . அனைத்து இன மக்களையும் சமத்துவப்படுத்தல் அவர்களின் தனித்துவமான உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் மத்திப்பளிக்கும் வகையில் சுவிட்ஸர்லாந்தின் அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. அதிகாரப்பகிர்விற்கான வரைவிலக்கணத்தை சுவிட்ஸர்லாந்தின் அரசியலமைப்பு 44 ஆவது பிரிவில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகார பகிர்வை தனிநாடாக அர்த்தப்படுத்துவது தெளிவற்ற விடயமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் அதிகாரப்பகிர்வை அடிப்படையாக கொண்ட நிர்வாக முறைமையை கொண்டுள்ளன. அதற்காக இலங்கைக்குள் சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டியை திணிக்கவோ பசைப் போட்டு ஒட்வோ முடியாது. அரசியல் தீர்வொன்றின் அவசிய நிலை வெளிப்பட்டுள்ள நிலையில் அதனை அடைவதற்கான கட்டாய தேவை காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்து விட முடியாது . மாறாக அனைத்து தரப்புகளினதும் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியமானதமாகும்.

சுவிட்ஸர்லாந்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்கள் இடம்பெயர்வு 1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கறுப்பு ஜீலையில் ஆரம்பித்தது. எவ்வாறாயினும் தற்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் சிறந்த உதாரணமாகும். ஒன்றிணைந்து வாழ கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதுவே இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குள்ள இலக்குகளாகும். சுவிட்ஸர்லாந்து இலங்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். நாட்டின் அரசியல் ஸ்தீரதன்மை ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பாக அமையும் என்றார்.