காணாமல் போனதாக கூறப்பட்டவர் கைது!

213 0

காணாமல் போனதாக கூறப்பட்ட அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நொச்சியாகம பிரதேசத்தில் மறைந்து இருக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின், குழுக் கொள்ளை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

குற்றக் கும்பல் தலைவராக கருதப்படும் அஜந்த புஷ்பகுமார என்ற குறித்த நபர் அவரது வீட்டில் இருக்கும் போது கடந்த 09ம் திகதி ஆயுதக் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தவின் ஆலோசனைப்படி அநுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், இதன்போது அவர் கடத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் 2014ம் ஆண்டு முதல் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற பாரியளவான திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றக் கும்பல் தலைவராக அறியப்படுகிறார். குறித்த நபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு பெட்டகையில் இருந்த சுமார் 07 கோடி ரூபா பெறுமதியுடைய 11.5 கிலோகிராம் தங்கம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு பணப் பெட்டகைகளை வெட்டுவதில் தேர்ச்சியுடையவராக கருதப்படும், இந்த கும்பலுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின், குழுக் கொள்ளை பிரிவு மற்றும் அநுரதபுரம் தலைமையக பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 09ம் திகதி காலை முதல் இபலோகம, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவர் காணாமல் போயுள்ளதாக இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.