சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடிவிக்ககோரி ஐனாதிபதிக்கு மகஜர்

317 0
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் புதுவருடத்திற்கு முன்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றைய தினம் மகஜர் ஒன்றினை பொது அமைப்புக்கள் இணைந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் அனுப்பியுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் பல தசாப்த காலமாக இடம்பெற்ற இன முரண்பாடுகளின் போது ஏதோவொரு காரணத்தின் அடிப்படையிலும் காரணங்கள் ஏதுமற்ற நிலையிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நீண்;ட காலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் உடல்,உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் குடும்பத்தினரும் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் அல்லது அந்த நடவடிக்கைகளுக்குத் துணை நின்றனர் எனக் குற்றஞ்சாட்டியே அவர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த யுத்தத்தைக் காரணம் காட்டிக் கைது செய்யப்பட்;ட தமிழ் இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை எந்த வகையிலும் நியாயமானது அல்ல,தமது பிள்ளைகள், கணவர்கள், தந்தையர்கள்,  தமது சகோதர உறவுகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்களின் உறவுகள் புதுவருடம் போன்ற பண்டிகைகளை எப்படிக் கொண்டாட முடியும்?
எனவே,இந்த நாட்டில் புதிய சமாதானமும் இனங்களுக்கு இடையே நல்லுறவும் மலரவேண்டுமாக இருந்தால் வருகின்ற தமிழ் சிங்கள புதுவருடத்தை தமிழ் சிங்கள இனங்கள் இணைந்து மகிழ்வாகக் கொண்டாடவேண்டுமாக இருந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தங்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏதுமறியாத அப்பாவிக் குழந்தைகள் சிறைகளில் உள்ள தங்கள் தந்தையர்களுக்காக தினமும் இறைவனை மன்றாடுகின்றனர். கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அவர்களின் மனதில் தாங்கள் இறைவனாக அவதாரம் எடுக்க முடியும்.
எனவே, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எதிர்வரும் புதுவருடத்திற்கு முன்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்.
அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுங்கள். அதற்கு முன்னதாக புதுவருடத்தை அவர்கள் தமது உறவுகளுடன் இணைந்து கொண்டாடுவதற்கு பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.