காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை வலுப்படுத்த, அக்கறை உள்ள அனைத்து உறவுகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்வடக்கில் பல்வேறு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கான தீர்வை வேண்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், அவர்கள் தமது போராட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
கடந்த கால யுத்தத்தின் போது எமது உறவுகளை பல்வேறு வளிகளில் இழந்துள்ளோம். இராணுவத்தின் கைகளில் நாம் ஒப்படைத்த உறவுகள் காணமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது.
இதற்கு பொறுப்புக்கூறவும் எவரும் முன்வருவதாக இல்லை. உறவுகளின் நிலை தெரியாமல் பரிதவிக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டங்களை கவனயீர்ப்புகளை மேற்கொண்ட போது பல மக்கள் பிரதிநிதிகளுடைய உத்தரவாதங்களை நம்பி ஏமாற்றமடைந்த நிலையில் உள்ளோம்.ஒருவர் கூட முன்வந்து எமக்கு நீதியான சரியான பதிலை வழங்குவதாக இல்லை. ஓரு மாதம் கடந்த நிலையில் எமது போராட்டத்தை வடக்கில் மேற்கொண்டு வருகிறோம். யாரும் பதில் தருவதாக இல்லை.
சாகும் வரை எமக்கு போராடுவோம் என கூற மாட்டோம். நாம் எமது உறவுகளுடன் வாழ வேண்டும். நாம் இருக்கும் போதே தீர்வினை தராதவர்கள் நாம் இறந்த பின்னர் எவ்வாறு தீர்வினை தருவார்கள். போராடித்தான் எமக்குரிய தீர்வினை பெற வேண்டும் என்றால் தொடர்ந்து போராடுவோம்.
எனவே எமக்கு இந்த 2017 ஆம் ஆண்டுக்குள் சரியான தீர்வு வேண்டும். அதற்கான இறுதியான போராட்டத்தை நாம் தொடர்சியான முறையில் மேற்கொள்ளவுள்ளோம். பாதிக்கப்பட்ட நாங்கள் மட்டும் இப் போராட்டத்தில் கலந்து கொள்வாதால் மட்டும் பயன் இல்லை. எம்மீது அக்கறை கொண்ட மனிதாபிமானம் கொண்ட உறவுகள் அனைவரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் எமக்கு சரியான பதிலை வழங்க வேண்டும். அதுவரை உறுதியானதும் இறுதியானதுமான போராட்டத்தை தொடர்சியாக மேற்கொள்வதுடன் அனைத்து இடங்களிலும் விரிவாக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தனர்

