தமிழர்களை அவமரியாதையாக நடத்தினால் ‘பொறுக்கமாட்டோம்

335 0

‘பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தனியார் பாதுகாப்புப் பிரிவினரால், தமிழர்கள் திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்படுவதுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

இதனை பாதிக்கப்பட்ட மக்கள் எனது கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளனர்’ என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். ‘எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், பொதுமக்களை ஒன்றுதிரட்டி, வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பேன்’ என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிடுவதற்காக, அவர்களது உறவினர்கள் (தமிழர்கள்) செல்லும்போது, வைத்தியசாலையில் கடமையில் இருக்கின்ற தனியார் பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதுடன் இனப்பாகுபாட்டையும் காட்டுகின்றனர்.

மேற்படி அதிகாரிகள், பெரும்பான்மையின மக்களை ஒரு மாதிரியாகவும் சிறுபான்மையின மக்களை ஒரு மாதிரியாகவும் நடத்துவதாக, பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை, வைத்தியசாலையிலுள்ள ஒருசில விடுதிகளுக்கு, நோயாளர்களை பார்வையிடச் செல்ல வேண்டுமாயின் அதற்கு, பாஸ் நடைமுறை இருக்கின்றது.

ஆனால், அந்த நடைமுறை தமிழர்களுக்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்களை, தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அவர்களை விரட்டியடிப்பதும், அவர்களிடம் கேள்வி கேட்க முற்படுகின்றவர்களை தாக்க முயற்சிப்பதும் என, பல மனிதாபிமானமற்ற நடவடிக்கையில், பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் இவை தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், பதுளை மாவட்ட எம்.பி அரவிந்தகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் கீழ் கண்டவாறு தெரிவித்தார். “பதுளை வைத்தியசாலையில் தமிழர்கள், அவமரியாதைக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் விடயத்தை பலர் எனது கவனத்துக்குகொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஊவா மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆளுநர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனைத்து விடயங்களையும் கடிதம் மூலம் அறிவித்ததோடு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரினோம். எனினும், உரிய தரப்புகளிடம் இருந்து இதுவரையில் எவ்விதமான மறுமொழியும் கிடைக்கவில்லை.

மேற்படி தரப்புகளிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்காத பட்சத்தில், மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் ஊடாக, மேலதிக விடயங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். தேவை ஏற்படுமாயின், உரிய தரப்பினருக்கு எதிராக பொது மக்களை திரட்டி, வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபடுவோம்’” என்றார்.