மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

311 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைகிறது.நேற்று காலை 8.00 மணிக்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல மருத்துவமனைகளில் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஏற்படும் பாதிப்பு அரசாங்கத்திற்கு இல்லை , பொதுமக்களுக்கே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்ச மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாலபே நெவில் பெர்ணாண்டோ போதனா மருத்துவமனையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து சைட்டம் மாணவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் செயற்படவுள்ள விதம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 முதன்மை விடயங்களை முன்வைத்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பதில் செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதனை தொடர்ச்சியாக போதனா மருத்துவமனையாக நடாத்திச் செலவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் மாணவர்களுக்கு ஹோமாகம மற்றும் அவிசாவளை ஆகிய மருத்துவமனைகளில் சத்திர சிகிச்சை, மருத்துவ, நரம்பியல் மற்றும் பிரசவம் தொடர்பான பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக உயர்கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த பயிற்சிகளின் பின்னர், இலங்கை மருத்துவ சபை மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒன்றிணைந்த கண்காணிப்பில் கீழ் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் மருத்துவ கல்வி தொடர்பான குறைந்த தரம் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படவுள்ளதாகவும் உயர்கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.