வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்று வௌ்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராட்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி விடுவிக்கும் பத்திரத்தைக் கையளித்தார்.
அரசாங்கத்தினால் விடுவிக்கப்படும் இடங்களில் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார்.
இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்ற 40 குடும்பங்கள் மீள்குடியேற்றபடவிருப்பதாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

