பிணை பெற்ற விமல் தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

303 0

கடந்த 3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்குமாறு கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப்பிணைகளிலும் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை முறை கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.