1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது – அனுர

467 0

1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது தமது உயிரை தியாகம் செய்து மேற்கொள்ளப்பட்ட பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

46வது ஏப்பரல் வீரர்கள் தினத்தை ஒட்டி மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது உயிர் நீத்த தமது உறுப்பினர்களை நினைவு கூர்ந்து மொனராகலை மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் ஜே.வி.பி நேற்று ஏப்ரல் வீரர்கள் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அனுரகுமார திஸாநாக்க, நாட்டின் சட்டம் வகுப்பு வாதத்தில் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அண்மையில் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் கோழியை களவாடிய ஒருவருக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறித்து அறிய முடிந்தது.

கோழி திருடுவது யார்? ரவி கருணாநாயக்கவோ, பெசில் ராஜபக்ஸவோ அல்லது அர்ஜூன மகேந்திரனோ அல்ல.

சாதாரண பொது மகன்.

சாதாரணமானவர்களுக்கே சட்டம் செயற்படுகிறது.

பாரியளவிலான மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை சட்டம் கண்டுகொள்வதில்லை.

இந்த நிலையில் எமது சகோதரர்களின் கிளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பட்டார்.