லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு: நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

257 0

டெல்லியில் நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் 8-வது நாளாக நீடித்து வரும் லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் 30 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் 8-வது நாளாக இன்றும் ஓடவில்லை.

லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பொருட்கள் பரிமாற்றமும் முற்றிலும் முடங்கி உள்ளது.இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறுகையில், தமிழக அரசுடன் கடந்த 3-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தை திருப்பதிகரமாக இருந்தது.

இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பை குறைக்க வேண்டும் என்ற எங்களுடைய முக்கிய கோரிக்கை தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடர்கிறது.மத்திய அரசு அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய நிதி அமைச்சகத்தில் தரை வழி போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் நிதி துறை இணை மந்திரி ஜங்குவார் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும். கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் வரும் 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வருகிற 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவது தொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.